புதுக்கோட்டை: குடிநீர்த்தொட்டியில் மலம் கலந்த விவகாரம் - 20 பேருக்கு சம்மன்

குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த 20 பேருக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Update: 2023-01-09 12:44 GMT

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கிராமத்தில் உள்ள வேங்கைவயல் தெருவில் ஆதிதிராவிட மக்களுக்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம ஆசாமிகள் சிலர் அசுத்தம் செய்த விவகாரம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமு அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது அங்குள்ள அய்யனார் கோவிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாடு உரிமை மறுக்கப்பட்ட விவகாரம், டீக்கடையில் இரட்டை குவளை முறை பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் ஆதிதிராவிட மக்களை அழைத்து கோவிலில் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுத்தார். மேலும், இரட்டை குவளை முறையை பின்பற்றிய டீக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

இருப்பினும் தற்போது வரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்யவில்லை. இதனிடையே குடிநீரில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க திருச்சி சரக டிஐஜி தரப்பில் ஏடிஎஸ்பி ரமேஷ் கிருஷ்ணா தலைமையில் 11 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டது. இந்த 11 பேர் கொண்ட குழுவினர், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சம்மந்தப்பட்ட கிராமத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் வேங்கைவயல் சேர்ந்த 20 பேர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏடிஎஸ்பி ரமேஷ்கிருஷ்ணன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு முன் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். ஏற்கனவே 70 பேரிடம் வாக்குமூலம் 70பேரிடம் பெற்ற நிலையில் 20 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்