தெளிவான சிந்தனையும், நம்பிக்கையும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்

தெளிவான சிந்தனையும், நம்பிக்கையும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற புதுக்கோட்டை என்ஜினீயர் கோபிகிருஷ்ணா கூறினார்.

Update: 2022-06-02 20:41 GMT

திருச்சி:

சிவில் சர்வீசஸ் தேர்வு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. மே மாதம் நேர்காணல் நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் அகில இந்திய அளவில் 685 பேர் வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் இடம் பிடித்தனர். இந்த தேர்வில் புதுக்கோட்டை மாவட்டம் மீனாட்சிநகரை சேர்ந்த கோபிகிருஷ்ணா தரவரிசை பட்டியலில் 491-வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார். இவரது தந்தை பாலசுப்பிரமணி. இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் மண்டல மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாய் சித்ரா இல்லத்தரசி. சகோதரி சிந்துபாலா டாக்டராக பணிபுரிந்து வருகிறார். கோபிகிருஷ்ணா அண்ணா பல்கலைக்கழகத்தில் செராமிக் டெக்னாலஜி பாடத்தை தேர்ந்தெடுத்து படித்தார்.

தெளிவான சிந்தனை

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றது குறித்து என்ஜினீயர் கோபிகிருஷ்ணா கூறுகையில், கல்லூரி படிப்பை முடித்தவுடன் இந்த தேர்வுக்கு தயாராக தொடங்கி விட்டேன். இதுவரை 4 முறை முயற்சி மேற்கொண்டு 4-வது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளேன். ஏற்கனவே முதல் முயற்சியிலேயே நேர்காணல் வரை சென்றேன். இதன் மூலம் தொடர் முயற்சி எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.

வீட்டில் பெற்றோரும் ஊக்கம் அளித்தனர். இந்த தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள், நமது இலக்கு எது என்பது குறித்து முதலில் தெளிவான சிந்தனையுடன் இருக்க வேண்டும். நேரத்தை சரியான வழியில் பயன்படுத்தினால் வெற்றியடைய முடியும். நான் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற இலக்கோடு தரவரிசை பட்டியலில் முன்னிலையில் வருவதற்காக மீண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத திட்டமிட்டு உள்ளேன், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்