மக்கள் நல பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மக்கள் நல பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

Update: 2023-04-11 18:38 GMT

சென்னை,

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 13 ஆயிரத்து 500-க்கும் கூடுதலான மக்கள்நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்; ஆட்சி மாறினாலும் அவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டிருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

ஆட்சி மாற்றம் நிகழும்போது முந்தைய ஆட்சியின் முடிவுகளை மாற்றக்கூடாது என்பது தான் இந்த தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்திருக்கும் முக்கிய அறிவுரை ஆகும். சுப்ரீம் கோர்ட்டின் இந்த அறிவுரை இனி வரும் காலங்களில் அனைத்து அரசுகளாலும் கடைபிடிக்கப்பட வேண்டும். மக்கள் நல பணியாளர்களை மீண்டும் பணியமர்த்தும் விஷயத்தில் அவர்களுக்கும் ஊதிய உயர்வு, பணி நீக்கப்பட்ட காலத்தையும் பணித்தொடர்ச்சியாக கருத வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் உள்ளன. அவற்றையும் தமிழ்நாடு அரசு கனிவுடன் ஆய்வு செய்து நிறைவேற்ற வேண்டும்.

2011-ம் ஆண்டில் பணி நீக்கப்பட்ட மக்கள்நல பணியாளர்களில் பலர் இடைப்பட்ட காலத்தில் உயிரிழந்துவிட்டனர். அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது மட்டுமின்றி, அவர்களின் குடும்பங்களில் உள்ளவர்களில் ஒருவருக்கு அவரது கல்வித்தகுதிக்கு ஏற்ற அரசு வேலையையும் வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்