வெயிலின் தாக்கம் குறையாததால் பொதுமக்கள் அவதி

வெயிலின் தாக்கம் குறையாததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

Update: 2023-06-08 18:45 GMT

முதுகுளத்தூர், 

தமிழகத்தில் இந்த ஆண்டு கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் கடந்த மே மாதம் 4-ந் தேதி தொடங்கி, 29-ந் தேதியுடன் முடிவடைந்தது. இருப்பினும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. குறிப்பாக முதுகுளத்தூர், கீழச்சிறுபோது, மேலச்சிறுபோது, பூசேரி, செங்கற்படை, ஆனைசேரி, கடம்போடை, தேரிருவேலி, ஆதங்கொத்தங்குடி, சித்திரங்குடி உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே இருந்து வருகின்றது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரையிலும் வெப்பம் வாட்டி வதைக்கிறது. பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் 100 நாள் வேலை மற்றும் வயல்வெளிகளில் கூலி வேலை பார்க்கும் தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். கூலி வேலைக்கு செல்லும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தலையில் துணியால் மூடியபடிதான் நடந்து செல்கின்றனர். மேலும் இரவு நேரங்களில் வீடுகளில் உள்ளேயும் புழுக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நிம்மதியாக தூங்க முடியாமலும் அவதி அடைந்து வருகின்றனர். அதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் முடிவடைந்தும் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்