குப்பைகளை எரிப்பதால் பொதுமக்கள் அவதி

இளையான்குடியில் குப்பைகளை எரிப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

Update: 2023-03-17 18:45 GMT

இளையான்குடி

இளையான்குடியில் அனைத்து தெருக்களிலும் குப்பைகளை அள்ளி தாலுகா அலுவலகம், மின் துறை அலுவலகத்திற்கு பின்புறத்தில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டுகின்றனர். அவ்வாறு கொட்டப்படும் குப்பைகளை தரம் பிரிக்காமல் பிளாஸ்டிக் மற்றும் அனைத்து விதமான இறைச்சி கழிவுகளையும் ஒரே இடத்தில் கொட்டுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகளை இரவு நேரத்தில் சிலர் தீ வைத்து எரிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். புறவழிச்சாலை, குளத்துக்கரை ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் காலை, மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இரவில் எரியும் தீ தொடர்ந்து பகல் நேரத்திலும் புகைக்க தொடங்குகிறது. இதனால் நடைபயிற்சி செல்கின்றவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் குப்பைகள் எரிப்பதால் ஏற்படும் புகை ஹவுத்அம்பலம் தெரு, காதர் பிச்சை தெரு, கலிபா தெரு, மணியக்காரன் தெரு போன்ற அருகில் உள்ள தெருக்களுக்கும் பரவுவதாக குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்