ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்

ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-27 20:21 GMT

லால்குடி:

மறியல்

லால்குடி அருகே உள்ள ரெட்டிமாங்குடி, மணிகண்டம் கிராமங்களில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழன்பில் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள 4 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைவிட்டனர்.

இந்நிலையில், லால்குடி அருகே செங்கரையூர் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் நேற்று மீண்டும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டனர். இதையறிந்த செங்கரையூர், ஆலங்குடி மகாஜனம், கே.வி.பேட்டை, அன்பில், அரியூர் கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் திரண்டு வந்து, செங்கரையூர் - பூண்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது அவர்கள், செங்கரையூர் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஏற்கனவே 4 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, குழாய்கள் மூலம் பெரம்பலூர், டால்மியாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி செயல்பட்டு வந்ததால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்தால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே அதற்கான பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இது பற்றி தகவல் அறிந்த தாசில்தார் விக்னேஷ், இன்ஸ்பெக்டர் பிரபு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆகியோர் விவசாயிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை அதிகாரிகள் கைவிட்டனர். இதையடுத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் 1½ மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்