பயணியிடம் செல்போன் பறித்த நபருக்கு தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்; கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

நெல்லை புதிய பஸ்நிலையத்தில் செல்போன் பறித்தவரை பொதுமக்கள் தாக்கியதால் அந்த நபர் தனது கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-05-14 20:55 GMT

நெல்லை புதிய பஸ்நிலையத்தில் செல்போன் பறித்தவரை பொதுமக்கள் தாக்கியதால் அந்த நபர் தனது கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செல்போன் பறிப்பு

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நேற்று மாலையில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர், அங்கு பஸ்சுக்காக காத்திருந்த பயணியிடம் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றார்.

இதனை பார்த்த பயணிகள் அந்த மர்மநபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் சம்பவ இடத்துக்கு சென்றார்.

தற்கொலை முயற்சி

இதற்கிடையே அந்த மர்மநபர், தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அந்த போலீஸ்காரர் அந்த நபரை ஆம்புலன்சில் ஏற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த மர்மநபர் ஆம்புலன்ஸ் கதவை திறந்து வெளியே குதித்து தப்பிச்சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் போதிய போலீசார் இல்லாத காரணத்தால் இந்த சம்பவம் நடந்து உள்ளதாகவும், பயணிகள் அதிகமாக உள்ள இடங்களில் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

தப்பிச் சென்றவருக்கு வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் முதற்கட்ட விசாரணையில் அவர் பழையபேட்டை பகுதியை சேர்ந்த நல்லதம்பி என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் எங்கு சென்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்