ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகை

மயானத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டனர்.

Update: 2022-06-11 19:37 GMT

பெண்ணாடம், 

திட்டக்குடி அடுத்த கொடிக்களம் ஊராட்சியில் அருந்ததியர் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட மயானத்தில் தனி நபர் ஒருவர் பன்றிகள் வளர்ப்பதற்கு கொட்டகை அமைத்து ஆக்கிரமிப்பு செய்து இருந்தார். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொது மக்கள் புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மயானத்தில் போராட்டம் நடத்தினர்.

அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கொட்டகையின் மேற்கூரையை மட்டும் அகற்றினர். ஆனால் கொட்டகையை அகற்றவில்லை.

முற்றுகை

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் கொடிக்களம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவர்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் கடந்த 8-ந் தேதி ஆக்கிரமிப்பை அகற்றுவதாக உறுதி அளிக்கப்பட்டது.ஆனால் இன்றுவரை ஆக்கிரமிப்பு கொட்டகையை காலி செய்யவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆவினங்குடி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி 2 நாட்களில் ஆக்கிரமிப்பை ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆகற்றி தரப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து செ்ன்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்