பொதுமக்கள் சாலை மறியல்

பெரியகுளம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-09 18:45 GMT

பெரியகுளம் அருகே கீழவடகரை ஊராட்சி பகுதியில் பெந்தகோஸ்தே சபை தெரு உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வாய்க்கால் வசதி இல்லாததால் தனியார் இடத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று காலை அப்பகுதி மக்கள் கழிவுநீரை வெளியேற்றக்கோரி கல்லார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ், துணைத்தலைவர் ராஜசேகர், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, ஊராட்சி செயலாளர் ஜெயபாண்டியன், போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா, தாசில்தார் காதர் ஷெரீப் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் கழிவுநீர் தேங்கி நிற்கும் இடத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர். அந்த இடத்தின் உரிமையாளரிடம் பேசினர். பின்பு கழிவுநீரை தற்காலிகமாக வாகனம் மூலம் சேகரித்து வெளியேற்றினர். அந்த பகுதியில் கழிவுநீரை நிரந்தரமாக வெளியேற்றுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்