மதுரையில் பொதுமக்கள் சாலை மறியல்
மதுரையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாகமலைபுதுக்கோட்டை,
நாகமலைபுதுக்கோட்டை அருகே தாராப்பட்டி கிராமத்தில் விநாயகர் சிலை தொடர்பாக அனுமதி மறுத்து ஒலிபெருக்கிகளை சேதப்படுத்தியதாகவும், தரக்குறைவாக பேசியதாகவும் கூறி நாகமலைபுதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவக்குமாரை கண்டித்து தாராப்பட்டி பொதுமக்கள் நேற்று காலை 9 மணியளவில் திடீரென மதுரை-மேலக்கால் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. தகவலறிந்து அங்கு வந்த சமயநல்லூர் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம் மற்றும் கொடிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி திருக்குமரன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர். இதன் காரணமாக மதுரை-மேலக்கால் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.