ஜோலார்பேட்டையில் 1½ வருடங்களாக குடிநீர் வராததால் பொது மக்கள் சாலை மறியல்

குடிநீர் கிடைக்காததால் கொதிப்படைந்த பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-29 11:37 GMT

ஜோலார்பேட்டை,

குடிநீர் கிடைக்காததால் கொதிப்படைந்த பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேசிய நெடுஞ்சாலை பணிகள்

திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி முதல் சேலம் வரை தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளால் வாணியம்பாடி-ஜோலார்பேட்டை இடையே குழாய்பதிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு குடிநீர் வினியோகத்தில் தடை ஏற்பட்டது. குடிநீர் பிரச்சினை காரணமாக அப்பகுதி பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனை சமாளிக்க சில நேரங்களில் நகராட்சி சார்பில் டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டது

எனினும் 9 மற்றும் 11-வது வார்டுகளில் உள்ள அப்பாச்சி கவுண்டர் தெரு, வாணியம்பாடி மெயின் ரோடு பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் வரவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட மேற்கண்ட பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் நேற்று காலை 9 மணி அளவில் திருப்பத்துார்-வாணியம்பாடி மெயின் ரோடு சந்தை கோடியூர் பஸ் நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் பழனி நகர மன்ற உறுப்பினர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தரப்பில் கூறுகையில், ''சுமார் ஒன்றரை ஆண்டுகளாக குறிப்பிட்ட 2 வார்டுகளில் மட்டும் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த வார்டுகளில் வசிக்கும் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

மேலும் தற்போது நகராட்சி ஊழியர்கள் குடிநீர் கட்டணம் செலுத்த வேண்டுமென கட்டாயப்படுத்துகின்றனர்.

இந்த இரண்டு வார்டுக்கும் கடந்த ஒன்றை ஆண்டுகளாகவே நகராட்சி நிர்வாகம் குடிநீர் சப்ளை செய்யாதபோது எப்படி குடிநீர் கட்டணம் செலுத்த முடியும்?'' என கேள்வி எழுப்பினர்.

ரத்து செய்ய வேண்டும்

மேலும் உடனடியாக குடிநீர் சப்ளை செய்ய வேண்டும் அத்துடன் குடிநீர் கட்டணத்தை ஒர் ஆண்டு முழுவதும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதற்கு அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்,

குறிப்பிட்ட 2 வார்டும், திருப்பத்தூர்- வாணியம்பாடி மெயின் ரோட்டை ஒட்டியுள்ளது.

தற்போது இங்கு சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருவதால், குடிநீர் குழாய் புதைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த பணி ஓரிரு நாட்களில் நிறைவடைந்து விடும். அதன்பிறகு சீரான குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், குடிநீர் கட்டணம் தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதன் பேரில், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த மறியலால் ஒரு மணி நேரம் நடந்த மறியலால் சாலையின் இருபுறமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்