பாப்கார்ன் ரூ.150 முதல் ரூ.400-டீ, காபி ரூ.70-க்கு விற்பனை; தியேட்டரில் படம் பார்க்கும் ஆசையே போய்விடுகிறது-பொதுமக்கள் கருத்து
பாப்கார்ன் ரூ.150 முதல் ரூ.400 வரையும், டீ, காபி ரூ.70 வரையும் விற்பனை செய்யப்படுவதால் தியேட்டரில் படம் பார்க்கும் ஆசையே போய்விடுகிறது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சினிமா தியேட்டர்கள் ஏழை-எளிய மக்களின் பொழுதுபோக்கு அரங்கம் என்று சொல்லப்படுவது உண்டு. ஆணும், பெண்ணும் குழந்தையும் குட்டியுமாக கிளம்பி திருவிழாவிற்கு போவது போல் தியேட்டர்களுக்கு போவார்கள்.
இப்போது அந்த ஆர்வமும், ஆசையும் இருந்தாலும்கூட அந்த மக்களால் சினிமா தியேட்டர்களுக்கு போகமுடியுமா என்று கேட்டால், முடியாது என்றே சொல்லத்தோன்றுகிறது.
மயக்கம் தரும் விலை
அந்த அளவில் தியேட்டர்கள் சாதாரண, சாமான்ய மக்களின் பட்ஜெட்டுக்கு உகந்ததாக இல்லை. டிக்கெட்டுகள் ஒருபுறம் இருந்தாலும், அங்கு உள்ள கேன்டீன்களில் விற்கப்படும் உணவுப் பண்டங்களின் விலைகளைக் கேட்டால் மயக்கம் போட்டுதான் விழ வேண்டும்.
10 ரூபாய், 20 ரூபாய்க்குக்கூட தகுதி இல்லாத வெறும் மக்காச் சோளப் பொரிக்கு (பாப்கார்ன்) 250 ரூபாய்! காபி, டீயா? 70 ரூபாய்! இது சாதாரணத் தியேட்டர்களில். மால்களில் இயங்கும் தியேட்டர்களில் இன்னும் பல மடங்கு அதிகம். பாப்கார்ன் ரூ.400 வரை விற்கிறார்கள். நாம் கொண்டுபோகும் தின்பண்டங்களையும் அனுமதிக்க மாட்டார்கள். சுருக்கமாகச் சொல்லப் போனால் டிக்கெட் கட்டணத்தைவிட தின்பண்டங்கள் விலைகளே திகைக்க வைக்கின்றன.
இதனால் தியேட்டருக்கு குடும்பத்தோடு சினிமாவுக்குப் போகவேண்டும் என்ற ஆசை அடியோடு அற்றுப்போகிறது.
என்ன நியாயம்?
இதுபற்றி விசாரித்தால், "தியேட்டர் பராமரிப்புச் செலவு அதிகமாகிறது. டிக்கெட் கட்டணம் அரசு நிர்ணயிப்பதால் அதை உயர்த்த முடியவில்லை. தின்பண்டங்களின் விலைகளை அதிகமாக வைத்திருக்கிறோம். யாரையும் கட்டாயப்படுத்தி தின்பண்டங்கள் வாங்கச் சொல்வது இல்லை'' என்கிறார்கள்.
நாம் கொண்டுபோகும் தின்பண்டங்களைப் பிடுங்கிவைத்துக்கொண்டு இவ்வாறு சொல்வது என்ன நியாயமோ? தெரியவில்லை.
சினிமா தொழிலுக்கு மூலதனமே அதைப் பார்க்கவரும் ரசிகர்கள்தான் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.
இதுபற்றி தேனி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு தரப்பினர் வெளியிட்டு இருக்கும் ஆதங்கங்கள், கருத்துகள் வருமாறு:-
மறைமுக வழிப்பறி
உப்புக்கோட்டையை சேர்ந்த தொழிலாளி நாகராஜ் கூறும்போது, "தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் திண்பண்டங்கள் விலை அதிகமாக உள்ளது. ரூ.10 மதிப்புள்ள பாப்காh;ன் ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. டீ, காபி விலையும் அதிகமாக உள்ளது. வெளியே கடைகளில் விற்பனை செய்யும் உணவுப் பொருட்களை விடவும் பல மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏழை, எளிய மக்கள் ஒருமுறை தியேட்டருக்கு சென்று படம் பார்க்க வேண்டும் என்றால் தனியாக பணம் சேமிக்க வேண்டும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. டிக்கெட் கட்டணத்தை விடவும் தின்பண்டங்களுக்கு அதிக செலவு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க வேண்டும் என்ற ஆசையே போய்விடுகிறது" என்றார்.
கம்பத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் சசிக்குமார் கூறும்போது, "தியேட்டர்களுக்கு படம் பார்க்கச் செல்லும்போது மக்களை குற்றவாளிகள் போல் நிறுத்தி சோதனை செய்யும் நடைமுறை பரவி வருகிறது. வெளி உணவுப் பொருட்களை யாரும் கொண்டு வந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த சோதனை நடக்கிறது. தியேட்டரில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை வாங்க வேண்டும் என்ற கட்டாயம் உருவாகுகிறது. குழந்தைகள் அடம் பிடிப்பதால் சில பெற்றோர்கள், குழந்தைகளை சமாளிப்பதற்கு படும் சிரமத்தை பார்க்க முடிகிறது. புதிய படங்கள் வெளியாகும் போது அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சினிமாவை வாழ வைக்கும் ரசிகர்களின் கையிருப்பு பணத்தை பறித்துக் கொள்வது என்பது ஒருவித மறைமுக வழிப்பறி போன்று மாறி வருகிறது. அத்துடன் சில மணி நேரம் மட்டுமே நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நிர்ணயித்த தொகையை விடவும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது"
ஆரோக்கிய உணவு
தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வந்த சின்னமனூரை சேர்ந்த கார்த்திக் கூறும்போது, "திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் தின்பண்டங்கள் விலையும் உயர்வு, ஆரோக்கியமாகவும் இருப்பதில்லை. இதனை வாங்கி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப்பதுடன், செலவையும் கட்டுப்படுத்துவதற்காக எதையும் திரையரங்குகளில் வாங்குவதில்லை. முன்பு எல்லாம் திரையரங்குகளில் உடலுக்கு ஆரோக்கியமான சுண்டல், வேர்க்கடலை, கடலை மிட்டாய், சுக்குகாப்பி மற்றும் கலர் சோடா போன்றவை விற்பனை செய்வார்கள். ஆனால் நாகரிக மோகத்தில் தற்போது திரையரங்குகளில் பீட்சா, பர்கர், பாப்கார்ன், குளிர்பானங்கள், சமோசா போன்றவை அநியாயமான விலையில் விற்கப்படுகிறது. ஆரோக்கியமான உணவு மற்றும் நவதானிய பொருட்களை பாக்கெட்டுகளில் அடைத்து நியாயமான கட்டணத்தில் வழங்கினால் தொடர்ந்து திரையரங்கு பக்கம் பொதுமக்கள் வருவார்கள்" என்றார்.
நிர்ப்பந்தம் செய்வது இல்லை
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணைச் செயலாளர் எஸ்.ஸ்ரீதர் கூறும் போது, "திரையரங்குகளுக்குள் வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுகளை அனுமதிக்க கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை பின்பற்றுகிறோம். அதேபோல் சொத்து வரி, குடிநீர் வரி, மின்சார கட்டணம் உள்ளிட்ட செலவினங்கள் அதிகரிப்பதால் அதற்கு ஏற்ற வருவாயை தேடிக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். இடைவேளையில் விற்கப்படும் பாப்கார்னை பொறுத்த வரையில் சென்னையில் ரூ.400, ரூ.200, ரூ.150 என்ற விலையிலும், டிக்கெட் கட்டணத்தை பொறுத்தவரையில் ரூ.10, ரூ.70 மற்றும் ரூ.146 என்ற நிலையிலும் இருக்கிறது. பொதுமக்கள் தங்கள் வசதிக்கு தகுந்தவாறு வாங்கிக் கொள்ளலாம். சென்னையைவிட்டு பிற மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் பாப்கார்ன் ரூ.30 அதிகபட்சமாக ரூ.40 கட்டணத்தில்தான் விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட் விற்பனை செய்யும் போது பாப்கான் கண்டிப்பாக வாங்கித்தான் ஆக வேண்டும் என்று யாரையும் நாங்கள் நிர்ப்பந்திப்பது இல்லை. அவர்களாகத்தான் சென்று வாங்கிக் கொள்கின்றனர்" என்றார்.
அரசு வசம் ஆன்லைன் டிக்கெட்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கே.ராஜன் கூறும் போது, "திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பண்டங்கள் அவர்கள் வாங்கும் விலையில் இருந்து 70 சதவீதம் மிக, மிக அதிகமாக அநியாய விலையில் விற்கின்றனர். வெளியில் இருந்து உணவு பொருட்களை கொண்டுவரக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவால் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு திரையரங்கு பக்கமே வருவதில்லை. அதிலும் குறிப்பாக பெரிய படங்களாக இருந்தால் திரையரங்குகளுக்கு வருகிறார்கள், சிறிய படங்களாக இருந்தால் எவரும் எட்டிக்கூட பார்ப்பதில்லை. டிக்கெட்டுகளும் ரூ.100-க்கு பதிலாக ரூ.400, ரூ.500 என்று விற்கப்படுகிறது. ஆன்லைன் கட்டணம் என்று ஒரு டிக்கெட்டுக்கு ரூ.40 கூடுதலாக வசூலிக்கின்றனர். 5 டிக்கெட் என்றால் ஆன்லைன் கட்டணம் ரூ.200 கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கிறது. இதனை திரையரங்கை சேர்ந்தவர்களும், ஆன்லைன்காரர்களும் பகிர்ந்து கொள்கின்றனர். வாகனம் நிறுத்துவதற்கு 1 மணி நேரத்திற்கு ரூ.50 கட்டணம், பாப்கார்ன் உள்ளிட்ட தின்பண்டங்கள், டீ, காபி செலவுகளுக்கு தனியாக ரூ.500 வேண்டும். மொத்தத்தில் ரூ.2 ஆயிரம் இல்லாமல் ஒரு குடும்பத்தினரால் திரையரங்குக்கு வரமுடியாது என்ற நிலை உருவாகி உள்ளது. இதனால் திருட்டு சிடி அதிகரித்து சினிமா தொழிலே நசுங்கி வருகிறது. தொழிலை மேம்படுத்த ஆன்லைன் டிக்கெட் விற்பனை தனியாரிடம் இல்லாமல் அரசு வசம் கொண்டு வந்து அவற்றை முறைப்படுத்த வேண்டும். தின்பண்டங்கள் விலை, வாகன நிறுத்தும் கட்டணம் உள்ளிட்டவற்றை திரையரங்குகளில் குறைக்க வேண்டும்" என்றார்.