கொளக்குடியில் சாலை, குடிநீர் வசதி செய்து தர கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை
கொளக்குடி ஊராட்சியில் குடிநீர் வசதி, சுடுகாட்டுக்கு தார்சாலை வசதி செய்து தர வேண்டும் என கலெக்டரை பொதுமக்கள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
கொளக்குடி ஊராட்சியில் குடிநீர் வசதி, சுடுகாட்டுக்கு தார்சாலை வசதி செய்து தர வேண்டும் என கலெக்டரை பொதுமக்கள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
காலை உணவு திட்டம்
தமிழக முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டம் 2-ம் கட்டமாக வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1,552 தொடக்கப்பள்ளிகளிலும் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இதையொட்டி மேற்கொள்ளப்பட்டு உள்ள பணிகள் குறித்து திருவண்ணாமலை ஒன்றியம் கொளக்குடி கிராமத்தில் லட்சுமிபுரம் மற்றும் அம்மன் நகர் பகுதிகளில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் சி.என்.அண்ணாதுரை எம்.பி.யுடன் கலெக்டர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பள்ளிகளில் அமைக்கப்பட்டு உள்ள அங்கன்வாடி மையம், வகுப்பறைகள், உணவு தயாரிக்கும் அறை போன்றவற்றை நேரில் பார்வையிட்டார்.
ஆழ்துளை கிணறுகள்
அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரை சந்தித்தனர்.
அவர்கள் கூறுகையில், ''எங்கள் பகுதியில் அரசு டவுன் பஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மன் நகர் பகுதியில் 3 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. எனவே கூடுதலாக ஆழ்துளை கிணறுகள் அமைத்தும், சிறிய குடிநீர் தொட்டிகள் அமைத்தும் தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும். சுடுகாட்டிற்கு செல்லும் பாதை மேடும், பள்ளமுமாக உள்ளதால் அங்கு தார் சாலை அமைத்து தர வேண்டும். எங்களின் அடிப்படை வசதியை நிறைவேற்றி தர வேண்டும் என்றனர்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.
ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ரிஷப், மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, தாசில்தார் சரளா, தி.மு.க. மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், அமைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம் உள்பட பலர் உடனிருந்தனர்.