கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்
பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்தது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, பசுமை வீடு அடிப்படை வசதிகள், கடன் உதவி என்பது உள்பட 298 கோரிக்கை மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து கலெக்டர் மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு மாற்று திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அவர் கால் பாதிக்கப்பட்ட 3 மாற்று திறனாளிகளுக்கு தலா ரூ.9 ஆயிரத்து 50 விதம், ரூ.27 ஆயிரத்து 150 மதிப்பீட்டிலான மூன்று சக்கர சைக்கிள்களையும், காதுகேளாத 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரத்து 780 வீதம் ரூ.27 ஆயிரத்து 800 மதிப்பீட்டிலான காதனி கருவிகள் போன்ற உதவி உபகரணங்களை வழங்கினார்.
இந்த குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், உதவி கலெக்டர் (பயிற்சி) கேத்ரின் சரண்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்திரி சுப்பிரமணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, பேச்சு பயிற்சியாளர் சுப்புலட்சுமி மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.