டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி பொதுமக்கள் மறியல்

டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-10 13:16 GMT

கலெக்டரிடம் மனு

பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி ஜமாலியா நகர், தேவர் நகர், எம்.எம்.எஸ்.நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களில் சிலர் நேற்று மதியம் 12 மணியளவில் கடையின் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கூறுகையில், இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி ஏற்கனவே பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சுமார் 300 குடும்பங்கள் வசிக்கும் எங்கள் குடியிருப்பின் அருகே உள்ள டாஸ்மாக் கடையினால் அந்த வழியாக பெண்கள், குழந்தைகள் சென்று வர முடியவில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் சென்று வர முடியவில்லை.

மது பிரியர்கள் தொந்தரவு

அந்த அளவுக்கு மது பிரியர்களின் தொந்தரவு அதிகமாக உள்ளது. அவர்கள் டாஸ்மாக் கடையில் மது பாட்டில் வாங்கிக்கொண்டு சாலையோரத்தில் வந்து அமர்ந்து மது அருந்தி ஒருவருக்கொருவர் சண்டையிட்டு, தகாத வார்த்தையால் திட்டிக் கொள்கின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் பெண்கள், குழந்தைகளை மது பிரியர்கள் கேலி, கிண்டல் செய்கின்றனர்.

மது பிரியர்கள் போதையில் உடலில் ஆடை இல்லாமல் படுத்து கிடக்கிறார்கள். ேமலும் அவர்கள் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது. மது குடித்து விட்டு பாட்டில்களை விவசாய விளை நிலங்களில் உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் அந்த வழியாக மேய்ச்சலுக்கு ஆடு, மாடுகளை அழைத்து செல்ல முடியவில்லை. டாஸ்மாக் கடை திறக்கப்படுவதற்கு முன்பும், மூடப்பட்ட பின்பும் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்

எனவே எங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக போலீசார் கூறியதை தொடர்ந்து, மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து சுமார் அரை மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர். மேலும் அந்தப்பகுதி பொதுமக்கள் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி நேற்று மீண்டும் பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்