டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்

பஞ்சப்பட்டியில் இயங்கி வரும் டாஸ்மாக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Update: 2023-06-09 19:19 GMT

டாஸ்மாக் கடையால் தொந்தரவு

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், பஞ்சப்பட்டி கடைவீதி அருகே குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் பஞ்சப்பட்டியில் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வரும் டாஸ்மாக்கடையால் அந்த வழியாக நடந்து செல்லும் பெண்கள், பள்ளி மாணவிகள் ஆகியோருக்கு தொடர்ந்து தொந்தரவு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து டாஸ்மாக் கடையை வேற பகுதிக்கு மாற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக்கடை அருகே வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதனால் உடனடியாக டாஸ்மாக் கடையை மாற்றியே தீர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

கடும் எதிர்ப்பு

இதனையடுத்து நேற்று முன்தினம் பஞ்சப்பட்டி- குளித்தலை சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே அந்த டாஸ்மாக்கடையை மாற்றம் செய்ய அதற்கான முன்னேற்பாடு பணிகளில் அதிகாரிகள் ஆயத்தம் ஆனார்கள்.

ஆனால் அந்த இடத்தில் டாஸ்மாக்கடை இயங்குவதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் டாஸ்மாக்கடையை மாற்றும் முயற்சி கைவிடப்பட்டது.

முற்றுகை போராட்டம்

இதற்கிடையில் நேற்று காலை 11 மணிக்கு பஞ்சப்பட்டி கடைவீதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு அப்பகுதி பொதுமக்கள் கூடினர். பின்னர் டாஸ்மாக்கடையை மூடக்கோரியும், இங்கு அந்த கடை செயல்பட கூடாது என வலியுறுத்தியும் பொதுமக்கள் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த டாஸ்மாக் அதிகாரிகள், லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் பொதுமக்கள் இரவு வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதற்காக அங்கேயே சமையல் செய்ய அடுப்பு, சமையல் பொருட்களை எடுத்து வந்தனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வெங்கடேஷசன் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீண்டும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பஞ்சப்பட்டி கடைவீதியில் இனி டாஸ்மாக்கடை இயங்காது என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்