கும்மிடிப்பூண்டி அருகே சாலை நடுவில் உள்ள தடுப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டம்

கும்மிடிப்பூண்டி அருகே சாலை நடுவில் உள்ள தடுப்புகளை அகற்ற கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-28 11:44 GMT

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை- சத்யவேடு சாலையில் 100-க்கும் மேற்பட்ட வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் கவரைப்பேட்டை- சத்தியவேடு நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கத்தின் போது அருகாமையில் உள்ள தனியார் குடியிருப்புகளுக்கும் பெட்ரோல் பங்குகளுக்கும் சாலை நடுவே தடுப்பு அமைக்காமல் வழி விடப்பட்டு உள்ளது. ஆனால், அரசால் வழங்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு  வழி விடாமல் சாலை நடுவே நெடுஞ்சாலை துறையினர் தடுப்பு அமைத்து உள்ளனர்.

எனவே தடுப்புகளை அகற்ற கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கவரப்பேட்டை- சத்தியவேடு சாலையின் இருபுறமும் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கவரைப்பேட்டை போலீசாரும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சாலை நடுவே போடப்பட்ட தடுப்பு சுவரை துண்டித்து உடனடியாக அரசு வழங்கிய வீட்டு மனைகளுக்கு வழியை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர் இதனையடுத்து தங்களது 1 மணி நேர சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்