ஏரி நீர் மாசுபடுவதை தடுக்க கோரி அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
சேலம் கருப்பூர் அருகே ஏரி நீர் மாசுபடுவதை தடுக்க கோரி அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
கருப்பூர்:
தாக்குட்டை ஏரி
கருப்பூர் அருகே உள்ள தேக்கம்பட்டி ஊராட்சி வட்டக்காடு பகுதியில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இங்கு உள்ள வட்டக்காடு தாக்குட்டை ஏரி தண்ணீரை கடந்த 40. ஆண்டுகளாக குடிநீர் தேவைக்காக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஏரியில் மீன் வளர்க்க குத்தகைக்கு விடப்பட்டது. மீன் வளர்ப்பவர்களால் இந்த ஏரியில் கோழி கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், மீன்களுக்கு தீவனமாக போடுவதால் ஏரி நீர் மாசுபடுதாக கூறப்படுகிறது. இந்த தண்ணீரை வட்டக்காடு பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது.
பஸ் சிறைபிடிப்பு
எனவே ஏரி நீர் மாசுபடுவதை தடுக்க கோரியும், ஏரி மற்றும் கால்வாய்களை தூர்வாரக் கோரியும், ஏரி குத்தகையை ரத்து செய்யக்கோரியும் நேற்று காலை 8 மணிக்கு 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வட்டக்காடு பஸ் நிறுத்தம் பகுதியில் திரண்டனர். பின்னர் அவர்கள் சேலம் நோக்கி சென்ற அரசு பஸ்சை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைப் பற்றி தகவல் அறிந்த சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், கருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, ஓமலூர் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் கோவிந்தராஜ், வருவாய் அலுவலர் அறிவுக்கண்ணு, தேக்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுதா, துணைத்தலைவர் பரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஏரி நீர் மாசுபடுவதை தடுத்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
விடுவிப்பு
தொடர்ந்து காலை 11 மணிக்கு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு, சிறை பிடித்த பஸ்சை விடுவித்தனர். பொதுமக்களின் போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.