அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

கடலூரில் கொட்டும் மழையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-03 18:36 GMT

மாற்று இடம்

கடலூர் புருகீஸ்பேட்டையில் உள்ள வாய்க்கால் கரையோரம் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் சாலையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருப்பதாகவும், அதனால் உடனடியாக வீடுகளை காலி செய்ய வேண்டும் என மாநகராட்சி சார்பில் அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் விடுக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் கோட்டாட்சியர், மாநகராட்சி அலுவலகங்களில் கோரிக்கை மனு அளித்தனர். இருப்பினும் இதுவரை மாற்று இடம் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் கடலூரில் நேற்று இடைவிடாது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் முரளி, நகரமைப்பு ஆய்வாளர்கள் அருள், தினகரன் ஆகியோர் பொக்லைன் எந்திரத்துடன் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக புருகீஸ்பேட்டை சென்றனர்.

முற்றுகை

பின்னர் அங்குள்ள வீடுகளை அகற்ற முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநகர செயலாளர் அமர்நாத், மாவட்ட குழு உறுப்பினர் பக்கீரான், நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் சாமி ரவி ஆகியோருடன் சேர்ந்து பொக்லைன் எந்திரத்துடன் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெண் மண்எண்ணெய் கேனுடன் அங்கு வந்தார். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த பெண்ணின் கையில் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கினர். இதுபற்றி தகவல் அறிந்த முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், தங்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். மேலும் தற்போது மழைக்காலம் என்பதால், நாங்கள் வீடுகளை காலி செய்து விட்டு எங்கே செல்வது. அதனால் வீடுகளை காலி செய்ய கூடுதல் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்றனர்.

பரபரப்பு

இதையடுத்து இன்ஸ்பெக்டர் உதயகுமார், கோட்டாட்சியரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அவர், வீடுகளை காலி செய்ய கூடுதல் காலஅவகாசம் வழங்கப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்ததாக கூறினார். அதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்