முக்கூடல் பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டம்

கோவில் திருவிழாவில் ராட்டினம் அமைக்க கோரி முக்கூடல் பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-07 19:38 GMT

முக்கூடல்:

கோவில் திருவிழாவில் ராட்டினம் அமைக்க கோரி முக்கூடல் பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

நெல்லை மாவட்டம் முக்கூடல் முத்துமாலையம்மன் கோவில் திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10, 11-ம் நாள் விழாவுக்கு கோவில் வளாகத்தில் ராட்டினங்கள் அமைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் ராட்டினம் அமைப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் 11 கவுன்சிலர்கள் தலைமையில் பொதுமக்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் முக்கூடல் பேரூராட்சி அலுவலகம் முன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ராட்டினம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு அஜித்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, முக்கூடல் நாடார் சமுதாய தலைவர் பொன்னரசு மற்றும் விழா குழுவினரிடம் ராட்டினம் அமைக்க அனுமதி வழங்குவது சம்பந்தமாக காவல்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை, அறநிலையத்துறை, வருவாய்த் துறை ஆகிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசி அனுமதி வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதன்பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்