மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்

மணல் குவாரிக்கு விடுமுறை விடக்கோரி லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-24 19:19 GMT

மணல் குவாரிக்கு விடுமுறை விடக்கோரி லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணல் குவாரி

திருச்சியை அடுத்த உத்தமர்சீலி அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு அரசு விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் மணல் ஏற்ற வருகிறது. இதனால் கல்லணை - திருச்சி சாலையில் மணல் லாரிகளால் விபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் பனையபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மணல் லாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் நின்றது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவலறிந்த லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம், கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டக்காரர்கள் போலீசாரிடம் கூறும்போது, தஞ்சாவூர், கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை வருகின்றனர். மணல் குவாரிக்கு வரும் லாரிகள் ஒன்றை ஒன்று முந்தி செல்ல போட்டி போட்டுக்கொண்டு செல்கின்றன. இதனால் விபத்து நடந்து பக்தர்களுக்கு அசம்பாவிதம் ஏற்படும். ஆகையால் மணல் குவாரிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கூறினர்.

பரபரப்பு

இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். இன்றைக்கு மட்டும் அனுமதி பெற்று வந்த லாரிகள் தவிர இனிவரும் லாரிகள் குவாரிக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என போலீசார் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் காலை 6 மணி முதல் 9 மணிவரை அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்