ஆதனூர் லட்சுமிபுரம் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

ஆதனூர் லட்சுமிபுரம் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-02 09:07 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு நிலம் என்று நினைத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 160-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொதுமக்கள் வீடுகள் கட்டியுள்ள சுமார் 12 ஏக்கர் 67 சென்ட் நிலப்பரப்பு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது‌. இதனையடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். பொதுமக்களின் போராட்டத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை நேரில் வந்து ஆதரவு தெரிவித்து உங்கள் இடத்தை அகற்ற விட மாட்டோம் என்று உறுதி அளித்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆர்.டி.ஓ. தலைமையில் தாம்பரம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் 300 போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு 2 பொக்லைன் எந்திரம், ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க ஒரு ஆம்புலன்ஸ் வாகனம், ஒரு தீயணைப்பு வாகனம் போன்றவற்றுடன் வந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த ஆதனூர் லட்சுமிபுரம் பகுதி சேர்ந்த பொதுமக்கள் ஆதனூர் லட்சுமிபுரம் பிரதான சாலையில் ஒன்று திரண்டு கொட்டும் மழையில் குடை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தாம்பரம் உதவி கமிஷனர் சிபி சக்கரவர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால் வீடுகளை அகற்றக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு துணை கமிஷனர், ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. நாங்கள் தற்போது ஆட்கள் இல்லாத 10 வீடுகளை மட்டுமே அகற்றி விட்டு சென்று விடுவோம் என்று தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மீண்டும் கொட்டும் மழையில் லட்சுமிபுரம் பிரதான சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே வருவாய் துறையினர் பொக்லைன் எந்திரத்துடன் மின் இணைப்பு மற்றும் ஆட்கள் இல்லாத 5 குடிசைகளை இடிப்பதற்காக சென்றனர். அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தை சுற்றி வட்டமாக நின்று கொண்டு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பொக்லைன் எந்திரத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்முதன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாட்டு ஏற்பட்டதால் மின் இணைப்பு மற்றும் ஆட்கள் குடியில்லாத 5 குடிசைகளை வருவாய்த்துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்போடு பொக்லைன் ஏந்திரம் மூலம் இடித்து அகற்றினார்கள். இந்த சம்பவம் காரணமாக ஆதனூர் ஊராட்சி லட்சுமிபுரம் பகுதியில் 6 மணி நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்