கல்குவாரியை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

கல்குவாரியை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

Update: 2023-04-03 21:22 GMT

கருங்கல்:

கப்பியறை பேரூராட்சிக்கு உட்பட்ட கருங்கல் மலையில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கல்குவாரி செயல்பட்டு வருவதால் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. ஆகவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதற்காக 'கருங்கல் மலையின் இயற்கையை பாதுகாக்கும் இயக்கம்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்த இயக்கத்தின் சார்பில் நேற்று முதல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கருங்கல் தபால் நிலையம் முன்பு சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அத்துடன் அந்த பகுதியில் குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இயக்கத் தலைவரும் கப்பியறை பேரூராட்சி தலைவருமான அனிஷா கிளாடிஸ் தலைமையில், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்த திரண்டனர். சத்தியாகிரகம் நடத்த போலீசார் அனுமதி மறுத்ததால் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கனிமவளத்துறை கூடுதல் இயக்குனர் தங்க முனியசாமி மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக கருங்கல் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்