ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை

முத்துப்பேட்டை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-28 18:22 GMT

முத்துப்பேட்டை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஆலங்காடு கிழக்கு கடற்கரை சாலை கோரையாறு படித்துறை முதல் அண்ணாசிலை வரை நீர்நிலைகள் மீது உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஆலங்காடு கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதன் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகள் என 105 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டது. ஆக்கிரமிப்புகளை தாங்களே முன்வந்து அகற்றிக்கொள்ள சம்பந்தப்பட்டவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனாலும் யாரும் அகற்றவில்லை. இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி மார்ச் 25-ந் தேதி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தபோது குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் முதல் கட்டமாக குடியிருப்புகள் முன்பு உள்ள தடுப்பு வேலிகளை மட்டும் அகற்றப்பட்டது.

முற்றுகை

மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்ற திருத்துறைப்பூண்டி தாசில்தார் உதயகுமார், வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் மாணிக்கவாசகம், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் அஜிஸ் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் அங்கு சென்றனர். இதையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு கோர்ட்டில் மறு விசாரணை அடுத்தமாதம் நடைபெறுவதால் தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பொதுமக்களுடனான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்களின் ஒத்துழைப்புடன், பொக்லின் எந்திரம் கொண்டு 4 வீடுகள் முன்பு இருந்த காம்பவுண்ட் சுவர், 3 கூரை கொட்டகை, 2 தகர கூரை கொட்டகைகள் அகற்றப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்