டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் மனு

ஆவூரில் பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

Update: 2023-02-06 18:33 GMT

டாஸ்மாக் கடை

புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் விராலிமலை தாலுகா ஆவூர் பகுதியை சோந்த பொதுமக்கள் மற்றும் தே.மு.தி.க.வினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அதில் ஆவூரில் பள்ளிக்கூடம் அருகே உள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் மற்றும் மாணவிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும், அந்த டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பல போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், அந்த டாஸ்மாக் கடையை அகற்ற கோரி தெரிவித்திருந்தனர். திருக்கட்டளை ஊராட்சி இந்திரா நகர் காலனியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 31) அளித்த மனுவில், சென்னையில் தான் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய போது மின்சாரம் தாக்கி 2 கைகளை இழந்த நிலையில், அரசு தரப்பில் நிவாரணம் மற்றும் உதவி வழங்க கோரி தெரிவித்திருந்தார்.

மண்பாண்ட தொழிலாளர்கள்

புதுக்கோட்டையில் இயங்கி வந்த கதர்கிராம தொழில்கள் வாரியம் உதவி இயக்குனர் அலுவலகம் திருச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த அலுவலகம் மூலம் நலத்திட்டங்கள், உதவிகள் பெற்று வந்த தொழிலாளர்கள் பாதிப்படைந்த நிலையில், இந்த அலுவலகத்தை மீண்டும் புதுக்கோட்டையில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர் நலச்சங்கம், மாவட்ட ஊனமுற்றோர் நலச்சங்கம், பனைவெல்லம் தொழிலாளர்கள் நலச்சங்கம், நூல் நூற்பாலை நலச்சங்கம், பல்வகை தொழில் முனைவோர் நலச்சங்கம், மாவட்ட வர்த்தக நலச்சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

303 மனுக்கள்

இதேபோல பொதுமக்கள் பலர் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். இதில் மொத்தம் 303 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டார். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.10,500 மதிப்புடைய மடக்கு சக்கர நாற்காலியினை அவர் வழங்கினார்.

முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், கொடிநாள் வசூல் பணியில் சிறப்பாக பணியாற்றிய 61 அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், உதவி ஆணையர் (கலால்) மாரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்