சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
அரியலூர் மாவட்டத்தில் சுண்ணாம்புக்கல் சுரங்க விரிவாக்கத்துக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கருத்துக்கேட்பு கூட்டம்
அரியலூர் மாவட்டம் கல்லக்குடியில் இயங்கி வரும் டால்மியா சிமெண்டு ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கம் அரியலூர் அருகே உள்ள கயர்லாபாத் கிராமத்தில் அமைந்து உள்ளது. இந்தநிலையில், இச்சுரங்க விரிவாக்கத்துக்கான கருத்துக்கேட்பு கூட்டம் கல்லங்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அப்போது அவர்கள் பேசும்போது கூறியதாவது:-
விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த பாலசிங்கம்:- சுண்ணாம்பு சுரங்கங்களை அதிகளவு ஆழம் தோண்டுகிறார்கள். மாசை கட்டுப்படுத்த, இயற்கையை பாதுகாக்க 33 சதவீதம் மரங்கள் நட வேண்டும் என்பது சட்ட விதிமுறை. ஆனால் அவற்றை ஆலைகள், சுரங்கங்கள் பின்பற்றியுள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஆலையினால் வெளியேறும் நச்சுப் புகையை சுவாசிப்பதால் சுவாச கோளாறு ஏற்படுகின்றன.
ஆற்றுக்கு பாதிப்பு வரும்
செங்கமுத்து:- சுண்ணாம்புக்கல் சுரங்கங்களிருந்து வரும் லாரிகள் அதிவேகமாக செல்வதால் விபத்து ஏற்படுகிறது. இதனை மாவட்ட கலெக்டர், குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். அரியலூரில் இருந்து கல்லங்குறிச்சி சாலையின் இருபுறமும் லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. இப்பகுதி வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுகிறது. எனவே லாரிகள் நிறுத்துவதை தடை செய்ய வேண்டும்.
சமூக ஆர்வலர் தமிழ் களம் இளவரசன்:- 600 பக்கங்கள் கொண்ட முழுமையான இ.ஐ.ஏ. அறிக்கையை பாமரனும் அறியும் வகையில் தமிழ்மொழியில் கொடுக்காமல், சுண்ணாம்புகல் சுரங்கத்தால் பாதிப்புக்கு உள்ளாகும் சுரங்க பகுதி மக்கள் புரிந்துக்கொள்ள முடியாத வகையில் ஆங்கிலத்தில் கொடுத்தது மக்களை ஏமாற்றும் வேலை. மேலும் தற்போதை சுரங்கத்தின் அருகே கல்லாறு என்ற காட்டாறு உள்ளது. இந்த சுரங்கம் தோண்டினால் அந்த ஆற்றுக்கு பாதிப்பு வரும். மேற்கண்ட நிறுவனம் இதுவரை தோண்டிய காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை முடி மரக்கன்றுகள் நட்டோ அல்லது நீர்நிலைகளாக்கியோ அரசிடம் ஒப்படைக்காத நிலையில் புதிய சுரங்கத்திற்கு அனுமதிக்கக்கூடாது.
சி.எஸ்.ஆர். நிதி
சங்கர்:- தொழிற்சாலைகளால் செலவிடப்படும் சி.எஸ்.ஆர். நிதி பாதிக்கப்பட்ட கிராமங்களில் செலவிடப்பட வேண்டும். சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் தோண்டும் பகுதியில் அப்பகுதியின் மக்களின் வாழ்க்கையின் தரத்தை உயர்த்த முன்வர வேண்டும். சி.எஸ்.ஆர். நிதியை முறையாக ஒதுக்குவதை மாவட்ட கலெக்டர் கண்காணிக்க வேண்டும். சமூக ஆர்வலர்களையும் அக்குழுவில் சேர்த்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து, பொதுமக்கள் கூறிய கருத்துகள் அனைத்தும் முறையாக பதிவு செய்யப்பட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், வனத்துறை மற்றும் பருவ நிலை மாறுபாடு அமைச்சகத்திற்கு அனுப்பப்படும் என அதிகாரிகள் கூறினர்.
கூட்டத்தில் சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில்குமார், அரியலூர் ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கலெக்டர் பாதியில் வெளியேறியதால் பரபரப்பு
கூட்டத்தில், சுண்ணாம்புக்கல் சுரங்கம் தொடர்பாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா திடீரென கூட்டத்தில் இருந்து வெளியேறினார். வழக்கமாக சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் முழுவதும் நிறைவடைந்த பிறகு மாவட்ட கலெக்டர் செல்வது வழக்கம்.
இந்தநிலையில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற முதல் கருத்து கேட்பு கூட்டத்தில் சிறிது நேரத்திலேயே கலெக்டர் வெளியேறியதால் தங்கள் கருத்துக்களை யாரிடம் கூறுவது. யார் பதிவு செய்வது?. தங்கள் கருத்துக்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது என தெரியாமல் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குழப்பம் அடைந்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.