தபால் நிலையங்களில் தேசிய கொடியை வாங்க பொதுமக்கள் ஆர்வம்

சேலம் மாவட்டத்தில் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தபால் நிலையங்களில் தேசிய கொடியை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.;

Update:2022-08-09 01:51 IST

சேலம் மாவட்டத்தில் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தபால் நிலையங்களில் தேசிய கொடியை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.சேலம் மாவட்டத்தில் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தபால் நிலையங்களில் தேசிய கொடியை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

75-வது சுதந்திர தினம்

வருகிற 15-ந் தேதி நாட்டின் 75-வது சுதந்திர தினம் என்பதால் நாடு முழுவதும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் 13, 14 மற்றும் 15-ந் தேதியில் தேசிய கொடியை ஏற்றி வீர வணக்கம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக 75-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு தேசிய கொடி எளிதில் கிடைக்கும் விதமாக இந்திய அஞ்சல் துறை சார்பில் அனைத்து தபால் நிலையங்களிலும் தேசிய கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தேசிய கொடி விற்பனை

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் கிழக்கு கோட்ட அஞ்சல்துறையில் 61 தபால் நிலையங்களும், மேற்கு கோட்ட அஞ்சல்துறையில் 47 தபால் நிலையங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த தபால் நிலையங்களில் கடந்த 1-ந் தேதி முதல் தேசிய கொடி விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது.

பொதுமக்கள் ஆர்வமுடன் தபால் நிலையங்களுக்கு சென்று தேசிய கொடியை வாங்கி செல்கின்றனர். துணியால் ஆன ஒரு கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் தேசிய கொடி விற்பனையை முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அருணாசலம் பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

21 ஆயிரம் கொடிகள்

சேலம் கிழக்கு கோட்டத்தில் சுமார் 10 ஆயிரம் கொடியும், மேற்கு கோட்டத்தில் 11 ஆயிரம் கொடியும் என மொத்தம் 21 ஆயிரம் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தபால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட உதவி கண்காணிப்பாளர் பரமேஸ்வரன் கூறுகையில், தபால் நிலையங்களில் துணியால் ஆன தேசிய கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கொடி ரூ.25 ஆகும். கடந்த 1-ந் தேதி முதல் சேலம் மற்றும் ஆத்தூர் தலைமை தபால் நிலையங்களிலும், மாவட்டம் முழுவதும் உள்ள துணை தபால் நிலையங்களிலும் இந்த தேசிய கொடிகள் விற்பனை நடந்து வருகிறது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்