பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - நலதிட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்

Update: 2023-01-24 09:03 GMT

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் குடிநீர் வசதி, சாலை வசதி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா, பசுமை வீடு அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 323 மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

அதை தொடர்ந்து கலெக்டர் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து அவர் தேசிய அறக்கட்டளை சார்பாக 2 மனவளர்ச்சி குன்றியவர்களின் பெற்றோர்களுக்கு பாதுகாவலர் நியமன சான்றுகளையும், தனியார் தொண்டு நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதி மூலமாக 12 மாற்றத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு தலா ரூ.4,000 ஆயிரம் வீதம், ரூ.48 ஆயிரம் மதிப்பீட்டிலான கற்றலுக்கான உபகரணங்கள் போன்ற நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், தனித்துணை கலெக்டர் மதுசூதனன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு மற்றும் பல்வேறு துறையை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்