தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்

நாகையில் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-11 18:45 GMT

வெளிப்பாளையம்:

நாகையில் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட கோரிக்கை விடுத்துள்ளனர்.

பணம் திருட்டு

நாகை, காடம்பாடி, பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் வடிவேலு என்பவருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இங்குள்ள பணியாளர்கள் தங்குவதற்கு அருகிலேயே குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பின் 3 அறைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரூ.3 ஆயிரம், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள கடிகாரம் உள்ளிட்டவற்றை திருடி சென்று விட்டனர்.

பின்னர் மர்ம நபர்கள் நகராட்சியில் இயங்கும் ஆதார் சேவை மையத்தில் இருந்த கணினி, பணம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் அச்சம்

நாகையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வழிபறி, திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களை பிடித்து அபராதம் விதிக்க ஆர்வம் காட்டும் போலீசார், திருட்டு, வழிபறி போன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க தயக்கம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தொடர் திருட்டு, வழிபறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்