நெல்லை அறிவியல் மையத்தில் பொதுமக்கள் கொண்டாட்டம்

நிலவில் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய காட்சியை நெல்லை அறிவியல் மையத்தில் பொதுமக்கள் கண்டுகளித்து கொண்டாடினார்கள்.

Update: 2023-08-23 20:13 GMT

நிலவில் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய காட்சியை நெல்லை அறிவியல் மையத்தில் பொதுமக்கள் கண்டுகளித்து கொண்டாடினார்கள்.

வெற்றிகரமாக இறங்கியது

நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் -3 என்ற விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியா அனுப்பியது. இந்த விண்கலத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்ரம் லேண்டர் கருவி பிரிக்கப்பட்டது. அது, நேற்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக இறங்கியது.

அறிவியல் மையம்

இந்த காட்சி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள அறிவியல் மையத்தில் பெரிய திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நேரடியாக பார்த்தனர். லேண்டர் வெற்றிகரமாக இறங்கிய உடன் கைதட்டி, மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் இந்த காட்சியை பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்தவாறு தொலைகாட்சிகளில் பார்த்து வெற்றியை கொண்டாடினர். இதுதவிர நெல்லை மாநகரில் தெருக்களில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

தண்ணீர் இருக்கிறதா?

இதுகுறித்து நெல்லை அறிவியல் மைய அலுவலர் எஸ்.எம்.குமார் கூறியதாவது:-

சந்திரயான் -3 விண்கலத்தில் இருந்து லேண்டர் நிலவில் இறங்கலாம் என்று 5 மணி நேரத்துக்கு முன்பாக ஆயத்த சிக்னல் வழங்கப்பட்டது. 2 மணி நேத்துக்கு முன்பாக அதாவது 3.40 மணிக்கு சரியாக திருப்தியாக இறங்கிக்கொண்டிருக்கிறது என்று தகவல் அறிவிக்கப்பட்டது.

55 டிகிரி ஆர்பிட் உயரத்தில் சுற்றி வந்த லேண்டர் 7 கிலோ மீட்டருக்கு முன்னதாக செங்குத்தாக இறங்க தொடங்கியது. 30 மீட்டர் உயரத்தில் இருந்து மிகமிக மெதுவாக இறங்கியது. திட்டமிட்டபடி 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் இறங்கியது. அதில் இருந்து வெளியே வரும் ரோவர் கருவி நிலவில் 14 நாட்களுக்கு சுற்றி வந்து ஆய்வு செய்து, புகைப்படங்களை எடுத்து நமக்கு அனுப்பி வைக்கும். ரோவர், நமக்கு நேரடிாகவும், சந்திரயான் -2ல் அனுப்பி தற்போது நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டருக்கும் படங்களை அனுப்பும்.

குறிப்பாக நிலவின் மேல்பகுதியில் தண்ணீர், ஹைட்ரஜன் உள்பட என்னென்ன இருக்கிறது? என்பதை இந்த ஆய்வின் மூலம் உறுதி செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அறிவியல் மைய கல்வி அலுவலர் மாரி லெனின் உடனிருந்தார்.

காங்கிரசார் கொண்டாட்டம்

நெல்லை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். மேலும் கொடியுடன் நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்