ரேஷன், ஆதார் கார்டுகளை ஒப்படைக்க வந்த பொதுமக்கள்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன், ஆதார் கார்டுகளை ஒப்படைக்க வந்த பொதுமக்கள் மனைப்பட்டா கேட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-17 19:03 GMT

ரேஷன் கார்டுகளுடன் வந்தனர்

திட்டக்குடி அருகே பெ.பொன்னேரி திடீர்குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் நின்று, கடந்த 14 ஆண்டுகளாக மனைப்பட்டா கேட்டு மனு அளித்தும் பலனில்லை. ஆகவே கலெக்டரிடம் தாங்கள் கொண்டு வந்த ரேஷன் கார்டு, ஆதார் கார்டுகளை ஒப்படைக்க போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பார்த்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு கலெக்டரிடம் மனு அளித்து விட்டு செல்லுமாறு கூறினர். அதற்கு அவர்கள் கடந்த 14 ஆண்டுகளாக தோப்பு புறம்போக்கு இடத்தில் 38 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு மனைப்பட்டா, சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்று 14 ஆண்டுகளாக மாவட்ட கலெக்டர், தாசில்தாரிடம் மனு அளித்து விட்டோம்.

தர்ணா

இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே நாங்கள் மனு அளிக்க போகமாட்டோம் என்று கூறி, திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறியும் அவர்கள் கேட்கவில்லை. இதனால் பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு இரவு 8.30 மணிக்கு பிறகு கலெக்டரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்