காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-10-17 04:00 IST

குடிநீர் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

ஊட்டி அருகே உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட மேல் கல்லட்டி பகுதியில் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கேட்டும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக கிராம சபை கூட்டங்களில் மக்கள் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

இருப்பினும், தீர்வு காணப்படாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். இந்தநிலையில் நேற்று குடிநீர் வசதி செய்து தரக் கோரி ஊட்டி-மசினகுடி சாலையில் உள்ள கல்லட்டியில் பொதுமக்கள் அமர்ந்து காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த தாசில்தார் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தெருவிளக்குகள் ஓரிரு நாட்களில் சரிசெய்யப்படும். ஒரு வாரத்திற்குள் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, மேல் கவ்வட்டியில் கடந்த 21 ஆண்டுகளாக குடிநீர் பிரச்சினை உள்ளது. இதனால் குடிநீர் எடுக்க வனப்பகுதி வழியாக நீண்ட தூரம் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. கடந்த முறை மழை பெய்த போது பல வீடுகள் சேதமடைந்தன. அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. சாலை வசதி இல்லாததால், இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்ல மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால் நாங்கள் நிம்மதியாக வாழ முடியாது என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்