ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற பப்ஜி மதன்

பப்ஜி மதன் தன்னுடைய ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார்.

Update: 2022-06-06 09:10 GMT

சென்னை,

தடைசெய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுக்களை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடி சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை தவறான வழிக்கு அழைத்துச் சென்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ஐகோர்ட்டு ரத்து செய்ததை அடுத்து அவர் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்திருந்த இந்த மனு இன்று நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது விளையாட்டின் போது பேசிய வார்த்தைகளை மட்டுமே காரணம் காட்டி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே விளையாட்டில் கலந்து கொள்ள அறிவுறுத்தி உள்ளதாகவும் மதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் பணமோசடி செய்த தொகையில் 1 கோடியே 7 லட்ச ரூபாயையும் இரண்டு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் மதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் விளையாட்டை பொறுத்த வரையில் விருப்பப்பட்டு சேர்ந்தவர்களிடம் மட்டுமே விளையாட்டின் போது உரையாடியதாகவும் மதன் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அதேசமயம் போலீஸ் தரப்பில், விளையாட்டில் கலந்து கொண்டவர்களிடம் கொரோனா நிதி என்று கூறி 2 கோடியே 89 லட்ச ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாகவும் விளையாட்டில் சேரும் சிறுவர்களை தவறான வழியில் நடத்தியதால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றும் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விளையாட்டை பயன்படுத்தி சிறுவர்கள் உள்ளிட்டோரிடம் தவறாக பேசியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் தற்போதைய நிலையில் மதனுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து ஜாமீன் மனுவை வாபஸ் பெறுவதாக மதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வாபஸ் பெற அனுமதி அளித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்