எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு நேற்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு நேற்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தேர்வு முடிவுகள்
தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த 20-ந்தேதி வெளியாகின. நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 20 ஆயிரத்து 90 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இதில் 19 ஆயிரத்து 301 பேர் தேர்ச்சி பெற்றனர்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை பொறுத்தவரையில், நெல்லை மாவட்டத்தில் 23 ஆயிரத்து 290 பேர் எழுதினர். இதில் 20 ஆயிரத்து 659 பேர் தேர்ச்சி பெற்றனர்.
மதிப்பெண் சான்றிதழ்
இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நேற்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது. மதிப்பெண் சான்றிதழை பள்ளிகள் அல்லது http://dge.tn.nic.in என்ற இணையதளம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது. நெல்லை மாநகர பகுதியில் உள்ள மீனாட்சிபுரம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் மறுகூட்டலுக்கு விருப்பம் உள்ள மாணவர்கள் வருகிற 29-ந்தேதி வரை பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.