அதிவேக அலைக்கற்றை வழங்கும் 'பாரத்நெட்' திட்டப் பணிகளை அரசு முதன்மை செயலாளர் ஆய்வு
தேனி பகுதியில் அதிவேக அலைக்கற்றை வழங்குவதற்கான ‘பாரத்நெட்' திட்டப் பணிகளை அரசு முதன்மை செயலாளர் நீரஜ் மித்தல் ஆய்வு செய்தார்.
அரசு முதன்மை செயலாளர் ஆய்வு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கண்ணாடி இழை கம்பி வடம் இணைத்து அதிவேக அலைக்கற்றை வழங்கும் 'பாரத்நெட்' திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். தேனி மாவட்டத்தில் இந்த திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்சேவைகள் துறையின் தமிழக அரசு முதன்மை செயலாளர் நீரஜ் மித்தல் இன்று தேனிக்கு வந்தார்.
தேனி அருகே அம்பாசமுத்திரம், தப்புக்குண்டு, அரண்மனைப்புதூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ள 'பாரத்நெட்' திட்டப் பணிகளை அரசு செயலாளர் நீரஜ் மித்தல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதுபோல் தேனி தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்திலும் இந்த திட்டப் பணிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.
ஆலோசனை கூட்டம்
அதைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வட்டார இ-சேவை மையங்கள் மற்றும் ஊராட்சி இ-சேவை மையங்களில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் நீரஜ் மித்தல் தலைமை தாங்கி அரசுத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அரசு முதன்மை செயலாளர் நீரஜ் மித்தல் கூறுகையில், "இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மின்னணு (டிஜிட்டல்) சேவைகள், இணையவழி கல்வி, தொலை மருத்துவம், இணையதள இணைப்பின் மூலம் வழங்கப்படும் தொலைபேசி, தொலைக்காட்சி, இணையம் ஆகிய சேவைகளை வழங்க இயலும். அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், அதிவேக இணையதள சேவையினைப் பெறுவதன் மூலம் கிராம அளவில் அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடையும்.
விரைவான சேவை
மேலும், புதிய ஊரக வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார நிலை மேன்மையடையவும் இத்திட்டம் வழி வகுக்கும். தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் பாதுகாப்பான மற்றும் விரைவான இணைய சேவைகளை பெறவும், நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையேயான தகவல் தொழில்நுட்ப திறன் இடைவெளியைக் குறைக்கவும் இத்திட்டம் உதவிடும்" என்றார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, திட்ட பொறுப்பு அலுவலர் சுரேந்திரன், பொதுமேலாளர் நாராயணன் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.