அதிக மகசூல் தரும் தக்காளி விதைகளை வழங்க வேண்டும்

வேலூர் மாவட்ட மண்ணின் தன்மைக்கு ஏற்ப அதிக மகசூல் தரும் தக்காளி விதைகளை வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2023-07-26 18:13 GMT

குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, உதவி வனபாதுகாவலர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

தக்காளி விதைகள்

அகரம்சேரி பகுதியில் பாலாற்றங்கரையோரம் 15 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அங்கு சமூக காடுகள் அமைப்பதற்காக அதிகாரிகள் செல்லும்போது அந்த பகுதியை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதனால் அதிகாரிகள் திரும்பி வரும்நிலை காணப்படுகிறது. எனவே அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சமூககாடுகள் அமைக்க வேண்டும். ஜார்தான்கொல்லை மலைப்பகுதிகளில் சாலையோரம் நிழல்தரும் மரவிதைகளை தூவ வேண்டும்.

தோட்டக்கலை துறையால் கடந்த முறை வழங்கப்பட்ட தக்காளி விதைகள் உரிய விளைச்சல் தரவில்லை. எனவே இங்குள்ள மண்ணின் தன்மை, காலநிலைக்கு ஏற்றவாறு அதிக மகசூல் தரும் தக்காளி விதைகளை வழங்க வேண்டும். மேலும் எந்த காலத்தில் அவற்றை பயிரிட வேண்டும் என்பது குறித்தும் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.

நெல் நடவு எந்திரம்

தென்னங்கன்று மற்றும் அதனை சார்ந்த உபபொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதி பெற்றுத்தர வேண்டும். ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதியில் விவசாயிகள் கரும்பு பயிரிட தயாராக உள்ளனர். அதற்கான விதை கொடுக்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக அரசு அலுவலர்கள் கரும்பு விவசாயிகளை சந்தித்து ஆலோசனைகள் வழங்க வேண்டும். வேளாண் பொறியியல் துறை மூலம் நெல் நடவு செய்யும் எந்திரம் மற்றும் டிரோன்கள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்க வேண்டும்.

விவசாயிகள் விளைப்பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதிக்கக் கூடாது. மோர்தாணா அணையை சுற்றுலா தலமாக்கி அங்கு சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும். காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அணைக்கட்டு பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். பொய்கை மாட்டு சந்தைக்கு வாகனங்களில் கொண்டு வரும் மாடுகளுக்கு ரூ.100, கால்நடையாக அழைத்து வரப்படும் மாடுகளுக்கு ரூ.50 கட்டணமாக பெறப்படுகிறது. மாடுகளை விற்றாலும், விற்பனை செய்யாவிட்டாலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனை திரும்பப்பெற வேண்டும்.

மும்முனை மின்சாரம்

கோரிக்கைகளை கேட்டறிந்த பின்னர் கலெக்டர் கூறுகையில், பிறமாநிலங்களில் தேங்காய் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரும்பு விவசாயிகள் அலுவலர்களை தொடர்பு கொள்வதற்கு வசதியாக அரசு அலுவலகத்தில் அறை அமைக்க ஏற்பாடு செய்யப்படும். விவசாயிகள் பயிர்களுக்கு தங்கு தடையின்றி தண்ணீர் பாய்ச்சுவதற்கு மும்முனை மின்சாரம் வினியோகிக்கப்படும்.

வேலூர் மாவட்டத்தில் நல்ல மகசூல் தரும் தக்காளி விதைகளை அதிகாரிகள் விவசாயிகளுக்கு வழங்கி, அதுதொடர்பான விவரங்களை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும். காற்றாலை அமைக்க வேண்டும் என்றால் அதிக காற்று வீச வேண்டும். வேலூர் மாவட்டத்தில் காற்றின் வேகம் குறைவு என்பதால் காற்றாலை அமைப்பது கடினம் என்றார்.

கூட்டத்தில் வேளாண்மை துணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்