சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கோாிக்கை
சூறைக்காற்றால் வாழைகள் சேதம் அடைந்ததில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கோாிக்கை விடுத்துள்ளார்.
இட்டமொழி:
களக்காடு பகுதியில் சூறைக்காற்றுடன் நேற்று முன்தினம் பெய்த திடீர் கோடை மழையால், வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட களக்காடு பகுதியில் உள்ள கருவேலங்குளம், மஞ்சுவிளை, பத்மநேரி, மேலபத்தை, கீழபத்தை, பெருமாள்குளம் உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் திடீரென்று சூறைக்காற்றுடன் பெய்த திடீர் கோடை மழையால், ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளன. இதனால் லட்சக்கணக்கில் பொருளாதார இழப்பை விவசாயிகள் சந்தித்து இருக்கிறார்கள்.
பெரும்பாலான விவசாயிகள் கடன் பெற்றுத்தான் இந்த வாழை விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், வாழை மரங்கள் தற்போது சேதம் அடைந்திருப்பதால், அவர்கள் தாங்கள் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அதனால், பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.