கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 12-ந் தேதி சிறை நிரப்பும் போராட்டம்; தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் முடிவு

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 12-ந் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்த தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

Update: 2023-10-05 19:55 GMT

மலைக்கோட்டை:

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின், தொடர் வேலை நிறுத்த போராட்ட விளக்க மாநில செயற்குழு கூட்டம், திருச்சியில் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். கவுரவ பொதுச்செயலாளர் குப்புசாமி, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் ஓய்வு பெற்றோர் சங்க மாநில தலைவர் செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் காமராஜ்பாண்டியன், மாநில கவுரவ பொதுச்செயலாளர் குப்புராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வேலை நிறுத்த பேராட்டம் குறித்து பேசினர். இதில் மாநில பொருளாளர் ஏ.சேகர், துணைத் தலைவர் நடராஜன், இணைச்செயலாளர் ஆர்.ஜி.சேகர், செந்தில்குமார் உள்பட மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக திருச்சி மாவட்ட செயலாளர் காமராஜ் வரவேற்றார். முடிவில் திருச்சி மாவட்ட தலைவர் ஜெகநாதன் நன்றி கூறினார்.

பின்னர் பொதுச்செயலாளர் காமராஜ் பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 4,500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் எம்.எஸ்.சி. மற்றும் ஏ.ஐ.பி. திட்டங்களின் கீழ் விவசாய உபகரணங்களை வாங்க கட்டாயப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 3-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அரசு எம்.எஸ்.சி. மற்றும் ஏ.ஐ.பி. திட்டத்தை அமல்படுத்துவதை கைவிட வேண்டும். அதேபோல் ஊதிய உயர்வை உடனடியாக எங்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம். இது குறித்து மேலும் அரசு காலதாமதம் செய்யும் பட்சத்தில் வருகிற 9-ந்தேதி தமிழகத்தில் கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட 7 மண்டலங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதனைத் தொடர்ந்தும் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வருகிற 12-ந்தேதி அனைத்து மாவட்டங்களிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்