மீன்சுருட்டி-கல்லாத்தூர் சாலையை சீரமைக்கக்கோரி 27-ந் தேதி போராட்டம்

அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் மீன்சுருட்டி-கல்லாத்தூர் சாலையை சீரமைக்கக்கோரி 27-ந் தேதி போராட்டம் நடைபெறுகிறது.

Update: 2022-11-23 18:30 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் மீன்சுருட்டியில் இருந்து குண்டவெளி வழியாக கல்லாத்தூர் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், முதியோர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் சிரமம் அடைந்து வருகிறார்கள். இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி சாலையை சீரமைக்கக்கோரி இருசக்கர வாகன பேரணி நடத்தி நூதன போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இருப்பினும் அந்த சாலையை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனைதொடர்ந்து மீன்சுருட்டியில் வருகிற 27-ந்தேதி போராட்டம் நடத்தப்போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்திருந்தனர். இதனைதொடர்ந்து ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மேலும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனைதொடர்ந்து பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மீன்சுருட்டி- கல்லாத்தூர் சாலையை சீரமைக்கக்கோரி திட்டமிட்டபடி வருகிற 27-ந்தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்