மணியரசன் பாறை மீது அமர்ந்து மலசர் இன மக்கள் போராட்டம்

கோவில் இருக்கும் இடத்தை உடைக்க எதிர்ப்பு தெரிவித்து மணியரசன் பாறை மீது அமர்ந்து மலசர் இன மக்கள் போராட்டம் நடத்தியதால் வடபுதூரில் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-10-16 18:45 GMT

கிணத்துக்கடவு

கோவில் இருக்கும் இடத்தை உடைக்க எதிர்ப்பு தெரிவித்து மணியரசன் பாறை மீது அமர்ந்து மலசர் இன மக்கள் போராட்டம் நடத்தியதால் வடபுதூரில் பரபரப்பு ஏற்பட்டது.

பாறை மீது கோவில்

கிணத்துக்கடவு அருகே வடபுதூர் பகுதியில் மணியரசன் பாறை உள்ளது. இது 7½ ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த பாறையின் உச்சியில் மலசர் இன மக்களின் குல தெய்வமான மணியரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சிங்கையன்புதூர், உழல்பதி, சொக்கனூர், முத்து கவுண்டனூர், கிணறுபள்ளம், மூலக்கடை ஆகிய கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்ப்பட்ட மலசர் இன மக்கள் வந்து செல்கின்றனர். மேலும் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் திருவிழா நடத்துவது வழக்கம்.

இதற்கிடையில் அந்த பாறையை உடைக்க கடந்த 2018-ம் ஆண்டு தனியாருக்கு, அரசு குத்தகைக்கு விட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பாறையை உடைக்கும் பணி கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

பேச்சுவார்த்தை

இந்த நிலையில் மணியரசன் பாறையை உடைக்க எதிர்ப்பு தெரிவித்து மலசர் இன மக்கள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களது குடும்பத்துடன் பாறை மீது உள்ள கோவில் முன்பு அமர்ந்து இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதை அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர்கள் திருநாவுக்கரசு, விமல் மாதவன், ஊராட்சி தலைவர்கள் அபின்யா அசோக்குமார், ராம்குமார் மற்றும் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மலசர் இன மக்கள் கூறியதாவது:-

மணியரசன் பாறையின் பெரும்பாலான பகுதிகளில் கற்கள் உடைத்து எடுக்கப்பட்டு உள்ளதால், தற்போது எங்களது கோவில் அந்தரத்தில் தொங்குகிறது. இங்கு மணியரசி அம்மன், கத்தி அம்மன் ஆகிய இரு தெய்வங்களை நீண்ட நாட்களாக வைத்து வழிபட்டு வருகிறோம். கடந்த சில ஆண்டுகளாக எங்களது வீடுகளில் அடுத்தடுத்து மரணம் ஏற்பட்டதால், அம்மனை தரிசனம் செய்ய பாறை மீது ஏறி வர முடியாமல் போனது.

தடுக்க வேண்டும்

இன்று(நேற்று) வந்து பார்த்தபோதுதான் தெரிந்தது, கோவிலை சுற்றி இருந்த அனைத்து பாறைகளும் உடைக்கப்பட்டு உள்ளது. அங்கு நின்று தரிசனம் செய்யகூட இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கோவில் இருக்கும் இடத்தை உடைக்காமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.பின்னர் போலீசார் கூறுகையில், இது தொடர்பாக கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கப்படும் என்றனர். இதை ஏற்று மலசர் இன மக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்