பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் முத்துப்பேட்டையில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது

Update: 2022-12-14 18:34 GMT

முத்துப்பேட்டை;

முத்துப்பேட்டையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் பேரூராட்சிக்கு உட்பட்ட திமிலத்தெரு, ஜமாலியாதெரு, கொய்யா தோப்பு உள்ளிட்ட தாழ்வாக உள்ள குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் மழைநீர் வடிய வழியின்றி குடியிருப்புகளை சூழ்ந்து நின்றது.இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமம் அடைந்துள்ளனர். இதுகுறித்து நேற்று பேரூராட்சி கவுன்சிலர்கள் மெகருன்னிசா, தமீம் அன்சாரி, ஜகபர் அலி, பெனாசிரா ஆகியோர் பேரூராட்சி நிர்வாகத்திடம் பம்புசெட் மூலம் நீரை வெளியேற்ற வேண்டும் என முறையிட்டுள்ளனர். ஆனால் அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனே நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்