கிராம மக்கள் தபால் கார்டு அனுப்பும் போராட்டம்

கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறுத்தக்கோரி கிராம மக்கள் தபால் கார்டு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கூறி கலைந்து சென்றனர்.

Update: 2023-04-07 19:30 GMT

கூட்டுக்குடிநீர் திட்டம்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 73 கிராமங்களின் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக பெரம்பலூர் மாவட்டம் பென்னகோணம் அருகில் வெள்ளாற்றில் நான்கு நீர் உறிஞ்சு கிணறுகள் அமைப்பதற்காக ரூ.22.84 கோடியில் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. வெள்ளாற்றின் தென்கரை அருகில் அமைக்கப்படவுள்ள நீர் சேகரிப்பு தொட்டி மற்றும் நீர் உந்து நிலையத்திலிருந்து 66.467 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய்கள் பதித்து, தற்போதுள்ள 5 தரைமட்டத் தொட்டிகள் மற்றும் புதிதாக கட்டப்படவுள்ள 2 தரைமட்டத் தொட்டிகளில் நீர் சேகரிக்கப்பட்டு, ஏற்கெனவே உள்ள 71 மேல்நிலை நீர்த்தேக்கதொட்டிகள் மற்றும் புதிதாக கட்டப்படவுள்ள 5 மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளுக்கும் நீர் ஏற்றப்பட்டு, அங்கிருந்து பகிர்மான குழாய் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட உள்ளது.

கண்டுகொள்ளவில்லை

இந்த நிலையில் இந்த பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு 73 கிராமங்களுக்கு தண்ணீர் கொடுத்தால் தங்களின் நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும், விளை நிலங்களில் பாசன வசதி குறையும் என்று தெரிவித்து ெலப்பைகுடிக்காடு, கீழக்குடிக்காடு மற்றும் பென்னகோணம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இத்திட்டத்தை நிறுத்தக்கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லையாம்.

போராட்டம்

இந்த நிலையில் நேற்று வேப்பூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறுத்தக்கோரி லெப்பைகுடிகாடு பகுதியை சேர்ந்த சுமார் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 5,000 தபால் கார்டுகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி நேற்று மதியம் 2 மணி அளவில் லெப்பைக்குடிகாடு பேரூராட்சியில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அஞ்சல் பெட்டியில் 5,000 தபால் கார்டுகளை போட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், லெப்பைக்குடிகாட்டை சுற்றியுள்ள மக்கள் தி.மு.க.வின் நல்லாட்சி தொடர விரும்புகிறோம். ஆனால் 2021 சட்டமன்ற தேர்தலின்போது தற்போதுள்ள குன்னம் எம்.எல்.ஏ. கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக வேப்பூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நீர் ஆதாரமற்ற எங்கள் பகுதியில் செயல்படுத்த முனைவதை, லெப்பைக்குடிக்காடு மற்றும் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கடுமையாக எதிர்க்கின்றோம் எனக்கூறி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து இத்திட்டம் எங்களின் போராட்டத்தை மீறி தொடங்கப்பட்டால் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என கூறிவிட்டு கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்