வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்
சுரண்டை அருகே அச்சங்குன்றம் கிராமத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து நேற்று 2-வது நாளாக கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
சுரண்டை:
சுரண்டை அருகே அச்சங்குன்றம் கிராமத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து நேற்று 2-வது நாளாக கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
பொதுமக்கள் போராட்டம்
சுரண்டை அருகே அச்சங்குன்றம் கிராமத்தில் 80 ஆண்டுகளுக்கு மேல் பழமையான டி.டி.டி.ஏ. தொடக்கப்பள்ளியும், அதில் ஒரு பகுதியில் ஆலயமும் இருந்துள்ளது. இந்த கட்டிடம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் அமைந்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்தப் பள்ளி வேறு இடத்தில் மாற்றப்பட்டதை தொடர்ந்து அந்த இடத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்த போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 42 பெண்கள் உட்பட 88 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் மகன் பரமசிவன் என்பவர் அந்த இடத்தில் கட்டிடப் பணி தொடங்கக்கூடாது என்று கூறி தீக்குளிக்க முயற்சித்தார். அருகில் இருந்த போலீசார் விரைந்து செயல்பட்டு அவரை காப்பாற்றினர். லேசான காயம் அடைந்த பரமசிவன் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கருப்புக் கொடி ஏற்றினர்
தகவல் அறிந்ததும் இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில செயலாளர் குற்றாலநாதன் ஆகியோர் விரைந்து வந்து கைது செய்யப்பட்ட பொதுமக்களிடம் விவரம் கேட்டு அறிந்தனர்.
இதையடுத்து வி.பி.ஜெயக்குமார் கூறுகையில், "கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அச்சங்குன்றம் கிராம பஞ்சாயத்தில் பெரும்பான்மையான மக்கள் இந்த கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாலும், இந்தக் கட்டிடம் கட்டும் இடம் அரசு புறம்போக்கு பகுதியில் இருப்பதால் கட்டிடம் கட்ட வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராம பஞ்சாயத்தின் தீர்மானத்தை பொருட்படுத்தாமல் மாவட்ட நிர்வாகம் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி அளித்தது இங்குள்ள பொது மக்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது" என்றார்.
2-வது நாளான நேற்று கட்டிடப் பணி தொடங்கிய நிலையில் பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் பொது இடங்களில் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.