புதிய ரேஷன் கடைக்கு இடத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்டு பெண்கள் வாக்குவாதம்
புதிய ரேஷன் கடைக்கு இடத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.;
பூந்தமல்லி ஒன்றியம், அகரமேல் ஊராட்சி அலுவலகத்துக்கு அருகில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. மிகவும் பாழடைந்து காணப்படும் இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டுவதற்காக ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
எனவே அந்த இடத்தை முறையாக அளவீடு செய்து புதிய ரேசன் கடை கட்டவேண்டும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இடத்தை அளவீடு செய்து கொடுக்கும்படி பூந்தமல்லி தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.
இதையடுத்து நேற்று அந்த இடத்தை அளவீடு செய்ய அதிகாரிகள் சென்றனர். அப்போது அந்த பகுதியில் வீட்டின் உரிமையாளர்கள் தங்களுக்கு சொந்தமான பகுதியில் ரேஷன் கடை கட்டி விட்டதாகவும், இது குறித்து பல ஆண்டுகளாக வழக்கு நடந்து வருவதாகவும், தற்போது அளவீடு செய்வது சரி இல்லை என்றும் கூறினர்.
மேலும் இடத்தை அளவீடு செய்ய விடாமல் தடுத்து நிறுத்திய பெண்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இடத்தை அளக்க வந்த அதிகாரிகள், அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்களை சமரசம் செய்து வைத்தனர். தற்போது இந்த இடம் தொடர்பாக வழக்கு நிலுவையில் இருப்பதால் வழக்கு முடிந்து தீர்ப்பு வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.