மாமன்னன் திரைப்படத்துக்கு எதிர்ப்பு: தியேட்டர் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
மாமன்னன் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'மாமன்னன்' திரைப்படம் ஒரு சமூகத்தை இழிவாக சித்தரிக்கிறது என்று கூறி, தென் மாவட்டங்களில் இந்த படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த திரைப்படம் நேற்று காலை வெளியாகி உள்ளது. திருச்சியில் 8 தியேட்டர்களில் அந்த திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் மாமன்னன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள சோனா-மீனா தியேட்டர் முன் கள்ளர் முன்னேற்ற சங்கத்தினர், அந்த சங்கத்தின் நிறுவன தலைவர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார், இது தொடர்பாக 16 பேரை கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.