108 ஆம்புலன்ஸ் நிர்வாக அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்த தொழிலாளர்கள் முடிவு

108 ஆம்புலன்ஸ் நிர்வாக அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்த தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Update: 2022-07-05 18:50 GMT

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் பெரம்பலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்கள் ஒருங்கிணைந்த மாத கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட செயலாளர் பிரகாஷ், அரியலூர் மாவட்ட தலைவர் வெள்ளிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் சாமிவேல் சங்கத்தின் நிதிநிலை அறிக்கையை வாசித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

பெரம்பலூர், அரியலூர், திருச்சி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த சங்கத்தின் மாநாடு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 8-ந்தேதி நடத்தப்படும். ஆம்புலன்ஸ் நிர்வாக அதிகாரிகள் சங்க உறுப்பினர்களிடம் விரோத போக்கை கடைபிடித்து வருவதை கண்டித்து மாவட்ட அளவில் போராட்டம் நடத்தப்படும். 3 மாவட்டங்களில் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 108 ஆம்புலன்சுகளை இயக்குவதற்கு பொதுமக்களுடன் நல்லுறவு கமிட்டி அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் சட்டவிரோத செயலுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து தொழிற்சங்கம் எடுத்து வருவதால் சங்க பொறுப்பாளர்கள், தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு எதிராக சங்கத்தின் மாநில தலைமை முன்னெடுக்கும் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கும், போராட்டங்களுக்கும் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்கத்தின் கோவை மண்டல தலைவர் சரவணன் தலைமையில் உறுதி மொழி எடுக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்