தர்மபுரியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றகோரி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
தர்மபுரி நகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர் சங்க நகராட்சி பிரிவு தலைவர் குட்டியப்பன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் நாகராஜன், மாவட்ட செயலாளர் ஜீவா, பொருளாளர் வெங்கட்ராமன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
காப்பீட்டு திட்டம்
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். தினக்கூலியாக அரசாணைப்படி ரூ.593 வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெறும் போது தொழிலாளர்களுக்கு அனைத்து விதமான பண பலன்களையும் ஓய்வு பெறும் நாளிலேயே வழங்க வேண்டும். நகர விரிவாக்கத்திற்கு ஏற்ற வகையில் தூய்மை பணியாளர்களை கூடுதலாக பணியமர்த்த வேண்டும்.
தர்மபுரி நகராட்சியில் 4 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை தொகுப்பூதியத்திற்கு மாற்ற வேண்டும். தர்மபுரி நகராட்சியை பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.