பாப்பாரப்பட்டி:
நல்லம்பள்ளி அருகே நாகர்கூடல் ஊராட்சி நாகர்கூடல், கழனிகாட்டூர், மத்தாளபள்ளம், பேபினமருதஅள்ளி கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு 2 அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் முறையாக பள்ளி, கல்லூரி நேரங்களில் வருவதில்லை என தெரிகிறது. இதனால் மாணவ, மாணவிகள் அவதியடைந்து வந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று நாகர்கூடல் கூட்ரோடு வழியாக அடுத்தடுத்த வந்த 2 அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த இண்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் முற்றுகையில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கையை விரைந்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் கிராம மக்களிடம் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.