நாமக்கல்லில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-03-28 18:45 GMT

நாமக்கல்:

நாமக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பை மீண்டும் வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அமல்படுத்திய அதே தேதியில் வழங்க வேண்டும்.

அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதிப்பு ஏற்படவில்லை

அதன்படி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம் உள்ளிட்ட இணைப்பு சங்கங்களின் நிர்வாகிகள், அரசு ஊழியர்கள் வேலைகளை புறக்கணித்து கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் மொத்தம் உள்ள 20 ஆயிரத்து 977 அரசு ஊழியர்களில், 258 பேர் மட்டுமே வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் தினசரி அரசு அலுவலகங்களில் நடைபெறும் பணிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்