திண்டுக்கல் உள்பட 15 இடங்களில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் உள்பட 15 இடங்களில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காஞ்சீபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி, ஊழியர்களை அவதூறாக பேசியதாக கூறி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, பழனி ஒன்றிய அலுவலகம் முன்பு சங்கத்தின் மாநில செயலாளர் ராஜசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டக்கிளை தலைவர் மகுடபதி முன்னிலை வகித்தார். இதில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், பணியாளர்கள் என பலர் கலந்துகொண்டனர். அப்போது காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரியை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோஷமிட்டனர்.
மேலும் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர் வீரகடம்பகோபு உள்ளிட்ட நிர்வாகிகள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் சரவணன் தலைமையிலும், திண்டுக்கல்லில் மாவட்ட துணை தலைவர் ஆரோக்கியஜார்ஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் உள்பட மொத்தம் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.